`உங்களுக்கு நான் இருக்கிறேன் - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலராக மாறிய திருவண்ணாமலை கலெக்டர்

சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் புகார் ஒன்று வந்தது. விவசாயி கண்ணன் மற்றும் அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர் புகார் மனு கொடுத்தார்கள். அதில், ``தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்தோம். பிரித்துக்கொடுத்த சில நாட்களிலேயே மகன்களின் நடவடிக்கைகள் மாறி, சோறு போடாமல் மாறி மாறி இரு மகன்களும் தவிக்கவிட்டனர். மேலும் அடித்தும் துன்புறுத்துகின்றனர்" எனக் கூறப்பட்டிருந்தது.

புகார் குறித்து விசாரணை நடத்திய கலெக்டர் கந்தசாமி புகாரில் உண்மையை அறிந்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு செட்டில்மென்ட் செய்த பத்திரப்பதிவுவை ரத்து செய்ததுடன் மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை பிரித்து விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டாவை மாற்றி கொடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் பாராட்டுகளையும் பெற்றார். இதேபோல் வறுமையில் வாடிய இளம் பெண் குடும்பத்துக்கு தக்க தருணத்தில் உதவியதுடன் அவர்கள் வீட்டில் உணவருந்தி நெகிழ்வைத்தார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் ஆட்சியர் கந்தசாமி தற்போது மேலும் ஒரு நன்மையையும் செய்துள்ளார்.

குப்பனத்தம் பகுதியை சேர்ந்த சுஜித்ரா, சுமித்ரா, வெங்கடகிருஷ்ணன் என்ற 3 பேரின் பெற்றோர் இறந்து விட்டதாகவும், முறைப்படி வரவேண்டிய சொத்துகளை அபகரிப்பதற்காக அவர்களை உறவினர்கள் கொடுமைப்படுத்திவருவதாகவும் சமீபத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஆட்சியர் பெண்களுக்கு உதவியுள்ளார். அதாவது, குழந்தைகளுக்கு உரிய வயது வரும்போது, அவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்துகளை பெறும் வகையில், மாவட்ட ஆட்சியரான கந்தசாமியே தன்னை பாதுகாவலராக நியமனம் செய்துகொண்டார். மேலும் அவர்களது பெற்றோருக்கு ஈம சடங்கு செய்ய 22 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளார். இவரது இந்த நடவடிக்கையை மாவட்ட மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

More News >>