`சொகுசாக வாழ வேண்டும் - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்

சென்னை சென்ட்ரலில் செல்போன்களை தொடர்ச்சியாக திருடி வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சமீபகாலமாக அதிகாலை நேரங்களில் பயணிகளின் உடைமைகள், குறிப்பாக செல்போன்கள் களவுபோவதாக ரயில்வே போலீசாருக்கு புகார் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்த நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் பயணிகளை நோட்டம்விட்டபடி சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த பாலாஜி என்ற நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் உண்மைகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார். அதன்படி பாலாஜி ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் தான் திருட்டு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. எதற்காக திருட்டு தொழில் செய்கிறாய் என்று கேட்டதற்கு, சொகுசாக வாழ்வதற்காக பயணிகளிடமிருந்து பொருட்களை திருடியதாக கூறியுள்ளார். மேலும் அவனிடமிருந்து, 10 சவரன் தங்க நகைகள் மற்றும் 11 விலை உயர்ந்த செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிகாலை செல்போன் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளதால் சென்ட்ரல் ரயில் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

More News >>