`ஆவணங்கள் திருடப்படவில்லை நகல் எடுத்திருக்கலாம் - ரஃபேல் விவகாரத்தில் யூடர்ன் அடித்த தலைமை வழக்கறிஞர்
ரஃபேல் விவகாரம் பூதாகரமாகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ரஃபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தின் ரஃபேல் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார்.
'ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளது. ஒருவேளை அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். எனவே அதனைச் சமர்ப்பிக்க முடியாது” என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வேணுகோபால் வாதிட்டார். மேலும் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தை வெளியிட்டதை கண்டித்து வாதிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆவணங்கள் திருடப்படவில்லை என தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாக நான் கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது, அது சரியானது அல்ல. கோப்புகள் திருடப்பட்டன என்ற வாசகம் தவறானது” என்றார்.