தினகரனின் அமமுக அணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி- கடலூரில் வேல்முருகன் போட்டி?

தினகரனின் அமமுக அணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெற உள்ளது. மேலும் தவாக தலைவர் வேல்முருகன் கடலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிக்ளும் கூட்டணி அமைப்பதில் படுபிசியாக இருந்தன. ஆனால் தவாக தலைவர் வேல்முருகனோ, தமிழகத்தில் தமிழருக்கே வேலைவாய்ப்பு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பிரமாண்ட போராட்டத்தை முன்னெடுத்தார்.

அதிமுக அணியில் பாமக இடம்பெற்ற நிலையில் வேல்முருகனை திமுக அழைக்கும் என கூறப்பட்டது. ஆனால் திமுக அணியில் ஏற்கனவே இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சிக்கே தொகுதி இல்லை என்கிற நிலை ஏற்பட்டது.

இதனால் திமுக அணிக்கு வேல்முருகன் செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன. அதே நேரத்தில் மூன்றாவது அணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற கருத்தை வேல்முருகன் வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு தினகரனின் அமமுக அணியில் தமது இடம்பெறக் கூடும் என்பதை வேல்முருகன் மறைமுகமாக கூறி வருகிறார். இது தொடர்பாக பேசிய வேல்முருகன், செய்தியாளர்களை புன்னகையோடு அணுகுபவர்களுடன் கூட்டணி என குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக வேல்முருகன் போன்றவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என தினகரன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதையடுத்து அமமுக தரப்பில் பத்திரிகையாளர்கள் சிலர் மூலம் வேல்முருகனின் நிலை குறித்து அறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்படி தினகரன் தம்மை நெருங்கி வருவதால் இப்போது க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் வேல்முருகன். தினகரன் அணியில் தவாக இடம்பெற்றால், கடலூர் லோக்சபா தொகுதியில் வேல்முருகன் போட்டியிடத்தான் வேண்டும் என அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

More News >>