அயோத்தி பிரச்சனை: உச்சநீதிமன்ற அமைத்த குழுவில் மூவரும் தமிழர்!
அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம். இந்த நிலம் யாருக்கு என்பதில் பிரச்சனை தொடருகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான பெஞ்ச், நேற்று இப்பிரச்சனைக்கு தீர்வு காண மூவர் குழுவை அமைத்தது.
இக்குழுவில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த மூவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இப்ராகிம் கலிபுல்லா, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, காஷ்மீர் மாநில தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றா இப்ராகிம் கலிபுல்லா.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அயோத்தி வழக்கில் சமரசம் ஏற்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
மற்றொரு உறுப்பினரான ஸ்ரீராம் பஞ்சு, சென்னையைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரச மையத்தை 2005-ம் ஆண்டு தொடங்கியவர் ஸ்ரீராம் பஞ்சு. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, 3 பேரும் தமிழர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.