திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் எவை?இன்று முடிவாகிறது
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்கின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று திமுக கூட்டணியில் இணைந்த விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா இரு தொகுதிகளும், மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
கூட்டணியில் அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதிகள் எந்தக் கட்சிக்கு என்பதை அடையாளம் காணும் பணி இன்று தொடங்குகிறது. முதலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் பற்றிய பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சு நடத்தி காங்கிரசுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது இன்றே முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மற்ற கட்சிகளுடனும் அடுத்தடுத்துப் பேசி யார் யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு விடும் எனத் தெரிகிறது.