ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருட்டா இல்லவே இல்லை என்கிறார் அட்டர்னி ஜெனரல்
பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் எதுவும் திருடு போகவில்லை என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்கள், மோடி அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது பற்றி விசாரிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுகளை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து திருடு போனது என்று தெரிவிக்கப்பட்டதாக, செய்திகள் வெளியாகி இருந்தன. இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
ஆனால், அவ்வாறு எந்த ஆவணமும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து திருடு போகவில்லை என்று, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாக நான் சொல்லவில்லை. எதிர்க்கட்சிகளின் அத்தகைய புகார் சரியல்ல. கோப்புகள் திருடப்பட்டன என்ற வாசகம் தவறானது என்றார்.வழக்கு விசாரணையின் போது, ஆவணங்களின் நகல்களை எதிர்மனுதாரர்கள் பயன்படுத்தி உள்ளது பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். அப்போது உச்ச நீதிமன்றத்தில் தாம் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.