கர்நாடக ஆளுநர் மாளிகையில் பூனைகள் தொல்லை - வேட்டையாட ரூ 1 லட்சத்திற்கு டெண்டர் விட்ட பெங்களூரு மாநகராட்சி
கர்நாடக ஆளுநர் மாளிகையில் பூனைகள் தொல்லையால் ஆளுநர் குடும்பத்தினரும், ஊழியர்களும் பெரும் அவதியடைய, 30-க்கும் மேற்பட்ட பூனைகளைப் பிடிக்க தனியார் நிறுவனத்துக்கு ரூ 1 லட்சத்திற்கு டெண்டர் விட்டுள்ளது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம்.
கர்நாடக ஆளுநராக இருப்பவர் வஜுபாய் வாலா . குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் வசித்து வருகிறார். பிரமாண்டமான ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஏராளமான மரம், செடிகளை வளர்த்து கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது.
சமீப காலமாக ஆளுநர் மாளிகை வளாகத்தில் பூனைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட பூனைகள் மாளிகைக்குள்ளும் சாவகாசமாக நுழைந்து ஆளுநர் குடும்பத்தினரையும், ஊழியர்களையும் ரொம்ப தொல்லைப் படுத்தி வந்தது. செல்ல நாயுடன் வாக்கிங் சென்ற போது பூனைகள் ஒன்று சேர்ந்து தாக்குவதால் ஆளுநரின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
பூனைத் தொல்லைக்கு முடிவு கட்டுமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தரப்பட்டது. விலங்கு நல வாரிய அதிகாரிகளை அழைத்து பூனைகளைப் பிடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கூறியதற்கு, நாய், பன்றிகளைத் தான் பிடித்துப் பழக்கம். பூனைகளைப் பிடிக்கத் தெரியாது என்று கூறிவிட்டனராம்.
பூனைகளைப் பிடிக்க வேறு வழி எதுவும் தெரியாத மாநகராட்சி நிர்வாகம் கடைசியில் பேப்பரில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. ஒரு தனியார் நிறுவனம் 98 ஆயிரம் ௹பாய்க்கு டெண்டர் எடுத்துள்ள தகவல் வெளியாகி, 30 பூனையைப் பிடிக்க 98 ஆயிரம் ரூபாயா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.