தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சில் எந்த இழுபறியும் இல்லை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதே நோக்கம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் நேற்று அதிமுக தரப்பையும் பிரேமலதா தாக்கிப் பேசிய நிலையிலும், அதிமுக தரப்பில் தேமுதிகவை கொண்டு வந்து விடுவோம் என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி என பலரும் கூறி வருகின்றனர்.
இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தேமுதிக கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறோம். அதனால் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி பொதுமக்களின் சில கோரிக்கைகளுக்காகவே தம்மை சந்தித்தாகவும், பாமக தலைவர் ஜி.கே மணி சந்தித்ததும் மரியாதை நிமித்தமாகத்தான் என்று கூறினார்.
ராஜீவ் கொலையில் சிறையில் உள்ள ஆயுள் கைதிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசுக்கு உள்ள அதிகார வரம்புக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.