பிளாஸ்டிக் சர்ஜரி.. முகத்தில் முரட்டு மீசை.. லண்டனில் சொகுசாக வாழ்ந்து வரும் நிரவ் மோடி
பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவதாக, பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரும், உறவினர் மெகுல் சோக்சியும், கடந்தாண்டு ஜனவரியில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபி ஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்டவை விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள அவரை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசிடம் இந்தியா வலியுறுத்தியது.
இந்நிலையில், நிரவ் மோடி தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, முரட்டு மீசையுடன் லண்டனில் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை, பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் இதழ் தெரிவித்துள்ளது.
லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில், சோகோ என்ற இடத்தில் அடுக்குமாடி சொகுசு குடியிருப்பில் வசித்து வருவதாக, தனது இணையதளத்தில் வீடியோவுடன் அது செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சற்று குண்டாக காணப்படும் நிரவ், முகத்தில் பெரிய மீசை வைத்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
லண்டனில் நிரவ் மோடி, புதிதாக வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாகவும், வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அலுவலகம் வைத்துள்ளதாகவும், டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது. தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு, அலுவலகத்திற்கு சென்று வருகிறார். கேட்கப்படும் கேள்விகளுக்கு, சாரி நோ கமெண்ட்ஸ் என்று பதிலளிக்கிறார் எனவும் அது தெரிவித்துள்ளது.
இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.