சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் கொஞ்சம் ஆறுதல் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாத கடைசியில் இருந்தே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை மழை பெய்து, வெயிலின் சூடு தணியாதா என்ற எதிர்பார்ப்பு பலரின் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று, அது தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்று அது மேலும் கூறியுள்ளது.