ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் தவான்..... புள்ளி விவரம் சொல்வது என்ன?
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று இந்தியா அணி தோல்வியை தழுவியது. முதல் இரண்டு போட்டிகளை வென்ற இந்திய அணி நேற்று ஓப்பனிங் சரியில்லாத காரணத்தால் வெற்றியை இழந்தது. ஆஸ்திரேலியா 313 ரன்களை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் - தவான் இணை அதிக ரன்களுக்கு நிலைக்கவில்லை. எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். நேற்றைய ஆட்டத்தில் தவான் பத்து பந்துகளுக்கு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசியாக நடந்த ஆறு ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வரும் தவான் எடுக்கும் மூன்றாவது சிங்கிள் டிஜிட் ஸ்கோர் இதுவாகும். மேலும் முதல் போட்டியில் டக் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகளிலும் சேர்த்து அவர் எடுத்துள்ள ரன்கள் 22 மட்டுமே.
நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் கடந்த சில ஆட்டங்களில் சொதப்பி வருகிறார். கடைசியாக தவான் பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால், அதில் அவர் இரண்டு இன்னிங்ஸில் மட்டுமே 50 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு முறை டக் அவுட் மற்றும் ஆறு முறை ஒற்றை இலக்க ரன்களையும் எடுத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் தவான் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 261 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள செய்தி பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இதன் மூலம் அவரின் சராசரி 24 மட்டுமே. ரோஹித் தவான் பாட்னர்ஷிப் கடந்த ஆறு போட்டிகளாக ஐம்பது ரன்களை கூட எடுக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகும்.
ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் தவனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைமையும் தத்தளிக்கிறது. எனவே மொத்த பிரஷரும் கோலிக்கே. உலக கோப்பைக்கு நல்ல ஓப்பனிங் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் தாவனின் ஃபார்ம் இந்தியா அணிக்கு தேவையான ஒன்று. ``தவான் ஒரு மதிப்பு மிக்க வீரர் என்றும், தனது ஷாட் செலெக்ஷனில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில், தவானின் ஆட்டம் நன்றாக இருந்தது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களுக்கு ஒரு முக்கிய வீரர். ஓப்பனிங்கில் களைகட்டும் இடது - வலது கூட்டணியால் மீண்டும் ஒரு நல்ல ஃபார்முக்கு வருவார்" என்று இந்திய அணியின் பேட்டிங் கோச் 'சஞ்சய் பங்கார்' தவானின் ஃபார்ம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.