இரண்டு பேர் டக் அவுட் ஏழு பேர் சிங்கிள் டிஜிட் - 45 ரன்களில் ஆல்அவுட் ஆன `பரிதாப வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 45 ரன்களில் ஆல் அவுட் ஆன பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மேற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்தநிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் ஜோ ரூட் - சாம் பில்லிங்ஸ் இணையின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொதப்பலான விளையாட்டை விளையாடினர். ஒருநாள் போட்டியில் கலக்கிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்த ஆட்டத்தில் வெறும் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினார். இதன்பின் வந்த வீரர்களில் யாருமே நிலைத்து ஆடவில்லை.
எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதனால், 11வது ஓவர் முடியும் முன்பே 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபகரமாக தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் ஹெட்மெயர் மற்றும் பிராத்வொய்ட்டை தவிர மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் ஜோர்டார் இரண்டு ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரன்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணி சர்வதேச டி20 போட்டிகளில் எடுத்த இரண்டாவது மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும்.