இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார்

இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ராணுவத்தினர் தொப்பி அணிந்து விளையாட்டில் பங்கேற்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.சி.சி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப் பட்டை அணிவார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் .

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு ராஞ்சியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினர். 2011 முதல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் பதவி வகிக்கும் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி, ராணுவ தொப்பிகளை மைதானத்தில் வீரர்களிடம் வழங்கினார்.

இதே போன்று கிரிக்கெட் வர்ணணை செய்த கவாஸ்கர், மஞ்ச்ரேகர், எல்.சிவராமகிருஷ்ணன், ஹர்ஷா போக்லே மற்றும் இந்திய அணி பயிற்சியாளர்களும் ராணுவ தொப்பி அணிந்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்ததற்கு பாகிஸ்தான் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பவாத் சௌத்ரி என்பவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் அரசியல் புகுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காஷ்மீர் பிரச்னையை உலகுக்கு தெரியப் படுத்தும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடும் தொனியில் கூறியுள்ளார்.

More News >>