ராணுவத்தொப்பியுடன் இந்தியா விளையாடியது விதிமீறலா.. பாகிஸ்தான் புகாருக்கு பதிலடி தந்த ஐ.சி.சி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை குண்டு வெடிப்பு தாக்குதலில், இந்தியா தரப்பில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும், நமது ராணுவத்தின் தொப்பியை அணிந்து விளையாடினர். இப்போட்டியின் மூலம் கிடைக்கும் ஊதியத்தை, கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்துக்கு நலநிதியாக வழங்குவதாகவும் இந்திய வீரர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த செயல், பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. இந்திய அணியினர் ராணுவ வீரர்களுக்கான தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி கூறுகையில், இந்திய கிரிக்கெட் அந்த நாட்டு ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்ணுக்கு மட்டும் இது தெரியவில்லையா? இவ்விவகாரத்தில் ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல், பாகிஸ்தான் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் துறை பவாத் சவுத்ரி, ராணுவ வீரர்களுக்கான தொப்பியுடன் இந்திய அணியினர் விளையாடிய படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறது. ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய போக்கு தொடர்ந்தால், காஷ்மீரில் இந்தியர்களின் அத்துமீறலை உலகுக்கு தெரியப்படுத்தும் வண்ணம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர், ராணுவத் தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியது. இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே, விசேஷ தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதி என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்றார்.