அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி இன்றாவது உடன்பாடு ஏற்படுமா
லோக்சபா தேர்தலுக்காக அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்று உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.
ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தலின் போதும் தாங்கள் பெரிய கட்சி; தங்களைத்தான் இதர கட்சிகள் தேடி வர வேண்டும் என போக்கு காட்டி சாதித்தது தேமுதிக. இந்த முறை அப்படியான எதிர்பார்ப்பு பலிக்கவில்லை.
அதிமுக, திமுக இரண்டும் தேமுதிகவை ‘நகைச்சுவை’ கட்சியாக மாற்றிவிட்டன. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவுக்கு திமுக நோஸ் கட் கொடுத்தது.
கதவை திமுக சாத்தியதால் அதிமுகவும் தமது கறார் பேரத்தை வெளிப்படுத்தியது. இதனால் எல்லாமும் நாசமாக போச்சு என்ற புலம்பல்களுடன் அதிமுகவுக்காக காத்திருக்கிறது தேமுதிக.
அத்துடன் வேற வழியே இல்லாமல் 4 லோக்சபா தொகுதிகளை மட்டும் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்த கட்சி. இதையும் கோட்டைவிட்டால் தனித்து போட்டியிட்டு மண்ணைக் கவ்வியே ஆக வேண்டிய நிலைதான் தேமுதிகவுக்கு.
இதனால் அதிமுக கொடுக்கப் போகும் 4 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு உடன்பாட்டில் இன்று தேமுதிக கையெழுத்திடும் என தெரிகிறது. ஏனெனில் கூட்டணியில் இடம்பெறாமல் போய் ஏமாந்த கட்சிகளுக்கு இடம் கிடையாது என இன்னொரு புறம் தினகரனும் கதவை இறுகப் பூட்டிவைத்துவிட்டார்.
தற்போதைய ஒரே வாய்ப்பாக அதிமுகவுடன் கை கோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை தேமுதிகவுக்கு என்பதுதான் கள யதார்த்தம்.