மேற்குவங்கத்தில் அதிரடி: காங்கிரஸ்- சிபிஎம் இடையே தொகுதி உடன்பாடு
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அணி அமைக்க மாநில கட்சிகள் முயற்சித்தன. ஆனால் இடதுசாரிகள் இதை விரும்பாமல் ஒதுங்கி நின்றன.
இதனால் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் நெருக்கத்தை வெளிப்படுத்த தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக மேற்குவங்கத்தில் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கட்சி இடையே ஒரு உடன்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 6 தொகுதிகளில் இரு கட்சிகளும் புரிந்துணர்வு அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது, ஆதரவு தருவது என்கிற முடிவுக்கு வந்தன.
இருப்பினும் 2 தொகுதிகள் குறித்து உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்தது; இந்த தொகுதிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தன்னிச்சையாகவே வேட்பாளர்களை கூட அறிவித்தது.
இது தொடர்பாக ராகுல் காந்தியுடன் சீதாராம் யெச்சூரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சர்ச்சைக்குரிய 2 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ், இடதுசாரிகளிடையேயான இந்த புரிந்துணர்வு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.