அந்த ஐ.நா. பயங்கரவாதி மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து ரிலீஸ் செய்ததே பாஜகதானே... ராகுல் பொளேர் போடு
ஐ.நா. பயங்கரவாதி மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக அரசுதானே என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹவேரியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே மோடி 5 ஆண்டுகாலம் பாடுபட்டுள்ளார். ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ரூ30,000 கோடி கிடைக்க வழிவகை செய்தவர் பிரதமர் மோடி.
விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் வருமானத்தை தருவோம் என்றது காங்கிரஸ். இதனால் நடுங்கிப் போன மோடி, விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டத்தை அறிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் என்கிறது பாஜக. இந்த மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து 1999-ம் ஆண்டு விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக அரசுதானே? இது குறித்து பிரதமர் மோடி பேசுவதே இல்லையே ஏன்?
இது குறித்து நீங்கள் பேசாவிட்டால் நாங்கள் நாட்டு மக்களிடம் விளக்கமாகவே கூறுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.