பாஜகவிடம் முதலில் பெட்டி வாங்குவது.. இரட்டை இலை, மாம்பழத்தை மட்டும் எதிர்ப்போம் என பேரம் பேசுவது... நீ புகழ் பிரேமலதா வியூகம்
லோக்சபா தேர்தல் கூட்டணியில் அதிமுக தம்மை கழற்றிவிட்டால் அதையும் எப்படி எதிர்கொள்வது என தேமுதிக பொருளாளரான “நீ” புகழ் பிரேமலதா வகுத்திருக்கும் வியூகம் பலரையும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பட வைத்திருக்கிறது.
தேர்தல்களை பணம் கொட்டும் ஒரு வாய்ப்பாக தேமுதிக நம்பிக் கொண்டிருப்பதை உலகத்துக்கே வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது தற்போதைய லோக்சபா தேர்தல்கள். தொகுதிகள் எண்ணிக்கையைவிட அந்த தொகுதிகளுக்கான செலவுத் தொகைதான் தேமுதிகவுக்கு குறி.
அதிமுக எவ்வளவு கோடி தரும், திமுக அதைவிட கூட தருமா? என கணக்குப் போட்டு இங்கிட்டும் அங்கிட்டுமாக பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. ஆனால் உள்ளதும் போச்சுடா கதையாக திமுக கதவை சாத்த, அதிமுகவோ இவ்வளவுதான் முடியுமா? முடியாதா? என கழுத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இப்போதைக்கு அதிமுக சொல்வதை ஏற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது தேமுதிக. அதேநேரத்தில் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும் பிரேமலதா போடும் இன்னொரு கணக்கு தமிழக அரசியல்வாதிகளை மிரட்டியிருக்கிறது.
அதாவது பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை; இதற்கு கணிசமான ஒரு தொகையை பாஜகவிடம் பெற்றுக் கொள்வது. இது தொடர்பாக இன்று சென்னை வரும் பியூஷ் கோயலிடம் பேசிப் பார்ப்பது.
அடுத்தது, அதிமுக, பாமகவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் (அதாவது கடைசி நேரத்திலாவது தொகை தேறுமா என்பதற்காக) இரட்டை இலை, மாம்பழம் சின்னங்களை எதிர்த்து மட்டும் போட்டியிடுவது... இப்படி செய்தால் என்ன என யோசிக்கிறாராம் பிரேமலதா.
இதன் மூலம் பாஜகவிடமும் ஒரு கணிசமான தொகை, கடைசிநேரத்திலாவது அதிமுகவிடம் கணிசமான தொகை என நினைத்ததை எப்படியும் சாதித்து பணத்தைக் குவித்துவிட வேண்டும் என்கிற வெறித்தனமாக செயல்பட்டு வருகிறாராம் பிரேமலதா.
அருள் திலீபன்