ராஜஸ்தான் எல்லையில் பாக்-ன் 3-வது ஆளில்லா வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!
ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஏவிய 3-வது ஆளில்லா வேவு விமானத்தை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தியது இந்திய விமானப் படை. அப்போது பாகிஸ்தானின் விமானப் படை விமானத்தை சுட்டு வீழ்த்தினார் விமானி அபிநந்தன்.
இதையடுத்து அவரை சிறைபிடித்து விடுவித்தது பாகிஸ்தான். இருப்பினும் காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஏவிய ஆளில்லா வேவு விமானத்தை விமானப் படை சுட்டு வீழ்த்தியது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் 3-வது ஆளில்லா வேவு விமானம் இது. ஏற்கனவே 2 ஆளில்லா வேவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.