அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகிறது - இன்று இரவு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படுகிறது. இதற்காக இன்று இரவு 7.40 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டு நட்சத்திர ஓட்டலில் இரு கட்சியினரும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கூட்டனியில் இணைவது குறித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேமுதிக தரப்புக்கு கெடு விதித்திருந்தது அதிமுக தலைமை . கடைசி வரை பேரத்தில் முரண்டு பிடித்து வந்த தேமுதிகவோ, திமுக உடனான கடைசி நேர உரசல்களால் தனித்து விடப்பட்டுள்ளது. கூட்டணி வைப்பதென்றால் அது அதிமுகவுடன் மட்டும் தான் என்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது தேமுதிக.
பாஜகவின் தொடர் நெருக்குதலால் அதிமுக தலைமையும் தேமுதிகவின் வரவுக்காக காத்திருக்கிறது. நீண்ட இழுபறிக்குப் பின் அதிமுக விதித்த கெடுவினால் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சம்மதித்துள்ளது. சென்னள ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று இரவு 7.40 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுடன் தேமுதிக தரப்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதனால் இன்று இரவே அதிமுக தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்தாகும் என்று தெரிகிறது. கடைசியில் தேமுதிகவுக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன