பயங்கரவாதிகளிடம் சரணடைந்துவிட்டீர்களே! மோடியை விளாசித் தள்ளும் உமர் அப்துல்லா
காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகாததால் அதிருப்தியடைந்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பொதுத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. எனினும், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுவது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது, அம்மாநில முக்கிய அரசியல் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா , கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமும், ஹூரியத் அமைப்பிடமும் சரண் அடைந்துவிட்டார். நன்றாக செய்து விட்டீர்கள் மோடி. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது’’ என்று கூறியுள்ளார்.
இதேபோல், மெகபூபா முப்தியும் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"காஷ்மீரில் உள்ள மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் சதித்திட்டமாகும்” என்றார்.