விருப்பமனு அளித்தவர்களிடம் இன்றும் நாளையும் நேர்காணல் கூட்டணி இறுதி செய்த உற்சாகத்தில் அதிமுக சுறுசுறுப்பு
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் ஏப். 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதேபோல், கூட்டணி விஷயத்தில் போக்கு காட்டி வந்த தேமுதிக, திமுக கைவிட்டதை அடுத்து, வேறுவழியின்றி நேற்று அதிமுக அணியில் சேர்ந்தது. அத்துடன் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், அதிமுக சார்பில் மக்களவை பொதுத்தேர்தல் விருப்ப மனு அளித்துள்ள வேட்பாளர்களுக்கான நேர்காணல், இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில், புதுச்சேரி நீங்கலாக 39 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
முதல் நாள் காலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கும்; பிற்பகலில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும்.
நாளை காலை திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி; நாளை மாலை திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.