ரம்ஜான் நோன்பின் போது லோக்சபா தேர்தலா? சிறுபான்மையினரை ஓட்டுப் போடவிடாமல் தடுக்கும் சதி... கொதிக்கும் மமதா கட்சி!
ரம்ஜான் நோன்பின் போது 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதலே சர்ச்சையாக வெடித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புகழ்பெற்ற சித்திரை தேர் திருவிழா நாளின் போது வாக்குப் பதிவு நடத்துவதா? என்கிற குரல்கள் கேட்கின்றன.
இதேபோல் பீகார், உ.பி, மேற்குவங்கத்தில் ரம்ஜான் நோன்பின் போது தேர்தலா? என்கிற எதிர்ப்புக் குரல் கேட்கிறது. இது தொடர்பாக கொல்கத்தா மேயரும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிர்ஹத் ஹக்கீம் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசனத்தின் அங்கம். அதன் மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறோம்.
பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு காலத்தில்தான் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதை தேர்தல் ஆணையம் ஏன் உணரவில்லை? பாஜகவைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் வாக்கு அளிக்காமல் இருந்தால் போதும் என்கிற சதித்திட்டத்துடன் செயல்படுகிறது.
இவ்வாறு பிர்ஹத் ஹக்கீம் கூறினார்.
முன்னதாக, லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 4-ந் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் பிரதமர் மோடி நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்துள்ளது என காங்கிரஸ் சாடியிருந்தது.