தென்கொரியா மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 41 பேர் பலி

சியோல்: தென்கொரியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தென்கொரியா நாட்டின் மிரயாங் நகரில் சேஜாங் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையில் மொத்தம் 6 அடுக்கு கட்டிடம் உள்ளது. இங்கு, நர்சிங் ஹோம் ஒன்றும் செயல்பட்டு வந்தது.

நேற்று இதய நோய் சிகிச்சை அறையில் இருந்து திடீரென தீ பற்றியது. அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் தீ பற்றியதை உணவர்தற்குள் தீ மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்நேரத்தில் அங்கு சுமார் 200 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்த நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றினர். மேலும், பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும், மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 80க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More News >>