தேர்தல் முறைகேடு புகாருக்கு சிவிஜில் செயலி
பொதுமக்கள் தேர்தல் முறைகேடு குறித்து எளிதாக புகார் செய்ய வசதியாக சிவிஜில் (cVIGIL app) என்ற மொபைல் போன் செயலியை தேர்தல் ஆணையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்ற இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மக்களவை தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்க புதிய தொழில்நுட்ப வசதியான செயலியை ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
ஆதார பூர்வமாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார் குறித்து உடனடியாக தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு சிவிஜில் செயலி (cVIGIL app) உதவும். இந்தச் செயலி மூலம் அளிக்கப்படும் புகார், மாவட்ட அளவிலான தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, அங்கிருந்து பறக்கும் படையினருக்கு புவியியல் தகவல் அமைப்பு (GIS) என்ற தொழில்நுட்பம் மூலம் அனுப்பப்படும்.
"தேர்தல் நடத்தை விதிமீறலை சிவிஜில் செயலியை பயன்படுத்தி, ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் மூலம் குடிமக்கள் பதிவுசெய்து தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பலாம். தேர்தல் குறித்த மிரட்டல் மற்றும் வலியுறுத்தல் போன்ற சம்பவங்களை குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்குச் நேரடியாக செல்லாமலே புகார் அளிக்க முடியும்," என்றும் "விதிமீறல் சம்பவங்களை படம் அல்லது வீடியோ பதிவு செய்து, சிறிய விளக்கத்துடன் சிவிஜில் செயலி மூலம் பதிவேற்றலாம். பெயரிலியாக (anonymous) புகாரை பதிவு செய்ய விரும்பினால், அதற்கும் வழிமுறை உள்ளது. இந்தச் செயலி மூலம் அளிக்கப்படும் புகார் மீது 100 நிமிட நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.