தேர்தல் அறிவிப்பால் ராணுவ விமானத்தை த விர்த்த நிர்மலா சீத்தாராமன் - பாஜகவினர் பெருமிதம்

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு திடீரென வெளியானதால் தான் வந்த ராணுவ விமானத்தில் மீண்டும் ஏறாமல், பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இதனை மெனக்கெட்டு செய்தியாக்கி பாஜகவினர் பெருமிதப் பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னையில் நடந்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியிலிருந்து சிறப்பு ராணுவ விமானத்தில் நேற்று வந்திருந்தார். மாலையில் மீண்டும் டெல்லி திரும்புவதற்காக சிறப்பு விமானம் காத்திருந்தது.

நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கிளம்பத் தயாரானபோது தேர்தல் அறிவிப்பு வெளியானது.

இதனால் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தேசியக் கொடி கட்டிய அரசு வாகனம், போலீஸ் எஸ்கார்ட் வாகனங்கள் எதுவும் வேண்டாம் என்று விட்டு பாஜக பிரமுகர் ஒருவரின் காரில் விமான நிலையம் சென்றார்.

தயாராக இருந்த ராணுவ விமானத்தையும் வேண்டாம் என்று கூறிவிட்டு பயணிகள் விமானம் பிடித்து நிர்மலா சீத்தாராமன் டெல்லிக்கு திரும்பினார் என்று கூறி தேர்தல் நடத்தை விதிகளை எங்கள் கட்சி மத்திய அமைச்சர் எந்தளவுக்கு மதித்து நடந்து கொண்டார் சென்னையைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

More News >>