`கற்றுக்கொண்டிருக்கேன் தேர்வு பற்றியெல்லாம் கவலையில்லை - அஷ்வின் ஓபன் டாக்
தமிழக வீரர் அஷ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் ஒருநாள் போட்டிகளில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் வருகைக்குப் பின்னால் அஷ்வினால் அணியில் இடம்பெற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா ஒருநாள் அணிக்குத் திரும்பினாலும் அஷ்வினால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்குத் திரும்ப முடியவில்லை. முன்னதாக இதுதொடர்பாக பேசிய அஷ்வின் தான் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பேன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அஷ்வின், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியுள்ளார். அதில் ``என்னை பொறுத்தவரை கிரிக்கெட் மட்டும் தான் முக்கியம். அணியில் தேர்வு செய்கிறார்களா என்பது இல்லை. அணிக்கு தேர்வு செய்யப்படாததை பற்றியும் கவலை இல்லை. ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக ஒவ்வொரு நாளும் மேம்பட வேண்டும். அதை மனதில் வைத்து தினமும் கற்று வருகிறேன். எனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவற்றில் பணியாற்றி வருகிறேன்.
அவ்வளவு தான். மற்றதை பற்றியெல்லாம் கவலையில்லை" என்றவர் ஐபிஎல் குறித்து பேசினார். அதில், ``என்னுடைய அணியில் முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகிறது. ஒரு அணியில் இருந்து முருகன் அஸ்வின் பௌலிங்கை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இதேபோல் வருண் டி.என்.பி.எல் போட்டிகளில் அருமையாகச் செயல்பட்டதையும் அறிவேன். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.