பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காவல்துறை நடவடிக்கை

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு. இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பிரபலங்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான தகவல்கள், டிரெண்டிங் ஆகி வருகிறது.

இவ்வழக்கில், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28) மற்றும் வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதுபற்றி, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விவகாரத்தில் அரசியல் கட்சியனர் யாருக்கும் தொடர்பில்லை.

இது தொடர்பாக, உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றார்.

More News >>