பாலியல் பலாத்கார வழக்கில் எந்த விசாரணைக்கும் தயார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தடாலடி
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் நானும், என் குடும்பத்தினரும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில், முகநூல் நட்பை பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இவ்விவகாரத்தில், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியே முயற்சிக்கிறது என்று, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நாகராஜ் என்பவரை, கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக தலைமை உத்தரவிட்டது.
இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு கெட்ட பெயரை உண்டாக்க, திமுக முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், தம்மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை; அவர்களை தண்டிக்கவே விரும்புவதாக கூறினார். கட்சியில் இருந்து ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு விசாரணைக்கும் தாமும், தனது குடும்பத்தாரும் தயாராக உள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.