போலீஸ் கான்ஸ்டபிளை மின் கம்பத்தில் ஏறச் செய்து செல்பி எடுத்து வம்பில் மாட்டிய சப்-இன்ஸ்பெக்டர்
அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்ற இரவு நேரத்தில் மின் கம்பத்தில் போலீஸ் கான்ஸ்டபிளை ஏறச் செய்து அதனை செல்பி எடுத்து மகிழ்ந்த சப் இன்ஸ்பெக்டரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், பேனர்கள், கொடிகள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் என அனைத்தையும் அகற்ற உத்தரவிடப்பட்டு அந்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் உன்னாவ் நகரில் நேற்றிரவு அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை போலீசார் அவசர, அவசரமாக அகற்றினர்.அப்போது மின் கம்பத்தில் இருந்த அரசியல் கட்சியின் கொடிகளைப் பார்த்த எஸ்.ஐ, உடன் வந்த போலீஸ்காரரை மின் கம்பத்தில் ஏறி அகற்றுமாறு கூறியுள்ளார். அப்போது கான்ஸ்டபிள் மின் கம்பத்தில் ஏறுவதை அழகாக செல்பி எடுத்து எஸ்.ஐ. மகிழ்ந்துள்ளார்.
இதனை குசும்புக்கார நபர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விட அது வைரலாகி, எஸ்.ஐ.யின் செயலுக்கு பெரும் கண்டனங்கள் குவிந்து விட்டது. இதைத் தொடர்ந்து அந்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது உன்னாவ் மாவட்ட நிர்வாகம் .