வாகனச்சோதனையில் கத்தை கத்தையாக கரன்சி ஆரம்பத்திலேயே கெத்து காட்டிய பறக்கும்படை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச்சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் அறிவிக்கை வெளியான நாளில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் அளிக்கப்படுவதை தடுக்க, வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் முதல் நாளான நேற்று மட்டும், பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் காரை மடக்கி சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த சங்கர்ராஜ் ( 40) என்பவரிடம் ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொள்ளாச்சி சாலையில், காரில் சென்றவரிடம் இருந்து கட்டுகட்டாக 10 லட்சம் ரூபாய்; திருவாரூர் அருகே கானூரில், அதிமுக கொடி கட்டிய காரில் சென்ற நபரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் நான்கு ரோட்டில், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், கேரளாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிரேம்குமாரின் காரில் இருந்து ரூ.3 லட்சம் சிக்கியது. பெரம்பலூர்- ஆத்தூர் சாலை அன்னமங்கலம் கைகாட்டி பகுதியில், காரில் வந்த தண்டபாணி என்பவரிடம் ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நடந்த சோதனையில், கார்களில் வந்த இருவரிடம் ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.67 ஆயிரம்; சரக்கு வாகனத்தில் வந்த சேகர் என்பவரிடம் இருந்து ரூ. 71 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
தமிழகத்தில் நேற்று மட்டும் பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.86 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.