தேர்தலால் ரம்ஜான் நோன்புக்கு பாதிப்பில்லை - மம்தா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது ஆணையம்
மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் ரம்ஜான் நோன்புக்கு பாதிப்பிருக்காது என்றும், ஒரு மாதம் நோன்பிருப்பவர்களால், ஓட்டுப்போட ஒரு சில மணி நேரம் ஒதுக்க முடியாதா? என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
மே மாதம் 5 அல்லது 6-ந் தேதி இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானுக்காக ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்புக் காலத்தில் தேர்தல் வைத்தால் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களால் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. சிறுபான்மையினர் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என திட்டமிட்டே தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக மே.வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் கட்சியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் குற்றம் சாட்டியிருந்தன.குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மே.வங்கம், உபி, பீகார் மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடத்துவது ஏன்? என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம் .முக்கிய பண்டிகை , திருவிழா நாட்களை கணக்கில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இஸ்லாமியர்கள் புனித நாளாகக் கருதும் வெள்ளிக்கிழமையில் தேர்தல் தேதி இல்லாமல் பார்த்துக் கொண்டோம். ரம்ஜான் நோன்பு என்பது ஒரு மாத காலத்திற்கு கடைப்பிடிக்கப்படுவது.ஒரு மாதம் நோன்பு இருப்பவர்கள் வாக்களிப்பதற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடி சென்று ஒரு சில மணிநேரம் செலவழிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.