காங்.தலைவர் ராகுல் நாளை தமிழகம் வருகை - நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்பு

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வருகிறார். நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே தமிழகத்திற்கு 4 முறை பிரச்சாரத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் முதல்முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்.

நாளை காலை 11 மணிக்கு சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் சந்திப்பிலும் ராகுல் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. பின்னர் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று காரில் நாகர்கோவில் செல்கிறார்.

நாளை மாலை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

More News >>