3 சட்டப்பேரவைக்கும் இடைத் தேர்தலை நடத்தக் கோரி திமுக வழக்கு - வெள்ளிக்கிழமை விசாரணை
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம் .திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி தேர்தலை அறிவிக்கவில்லை.
3 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆளையம் மீது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அதிமுகவுக்கு ஆதரவாக உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்தார். வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தாததில் உள்நோக்கம் உள்ளது. அவசர வழக்காக விசாரித்து மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி மனுவில் கூறியிருந்தார். இதனை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளனர்.