திருமணமாகி 3 மாதம் தான் ஆகிறது.... எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்திய பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்தியர்கள் 4 பேரில் ஒருவரான இந்திய பெண் அதிகாரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. கணவருடன் செல்ல வேண்டியவர் கடைசி நேரத்தில் தனியாக சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து நைரோபி புறப்பட்ட விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர்.பலியானவர்களில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஆலோசகராக பணியாற்றிய சிகா கார்க் என்ற பெண் அதிகாரியும் அடங்குவார். சிகா கார்க் உயிரிழந்த தகவலை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்க முடியவில்லை. யாரேனும் உதவ முடியுமா? என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் பதறிப் போய் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சிகா கார்க் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 32 வயதான சிகா கார்க் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த சவுமியா பட்டாச்சார்யா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. டெல்லியில் வசித்து வந்த சிகாகார்க் மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் நைரோபியில் நடந்த ஐ.நா.சுற்றுச்சூழல் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார்.

முதலில் கணவருடன் நைரோபி செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் வேறு அவசரம் காரணமாக கணவர் செல்லவில்லை. எத்தியோப்பியா சென்ற கார்க் அங்கிருந்து பிற ஐ.நா.அதிகாரிகள் 24 பேருடன் நைரோபிக்கு புறப்பட்டுள்ளார். அடிஸ் அபாபாவில் இருந்து பெற்றோருடன் போனில் பேசியுள்ளார்.

விமானத்தில் ஏறி புறப்பட்டவுடன் கணவருக்கு அனுப்பிய மெஸேஜில் விமானம் கிளம்பி விட்டது. இறங்கியவுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு கணவர் மெஸேஜ் டைப் செய்து அனுப்புவதற்குள் விமானம் நொறுங்கி இந்திய பெண் அதிகாரியின் கதை முடிந்து விட்ட சோகம் நிகழ்ந்துவிட்டது.

More News >>