நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்

போலீஸ் எனக் கூறி வாலிபரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கோபிநாத் ஆஃபீஸ் விஷயமாக ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சி செல்வதற்காக மாநகர பஸ்சில் கோயம்பேடு சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் காரில் வந்து பஸ்ஸை வழிமறித்துள்ளது. பின்பு பஸ்ஸில் ஏறிய வாலிபர்கள் சிலர் கோபிநாத்திடம் சென்று நாங்க போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், உன்னை விசாரிக்க வேண்டும் எனக் கூறி விசாரணைக்கு வருமாறு அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தாங்கள் வந்த காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

பின்னர் வண்டலூர் சென்ற அவர்கள், அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கோபிநாத்திடம் இருந்த ரூ.97 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது. இதுபற்றி கோபிநாத் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோபிநாத்தை காரில் கடத்திச் சென்ற கும்பல் அடையாளம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் சென்னையில் வைத்து நடந்த இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>