``எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ் - ரஜினியுடன் இணைந்த மாஸ் காட்டிய ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த வருடம் இடம் பிடித்தார் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். அணியில் இடம்பிடித்தது முதல் தொடர்ந்து பல முறை தமிழில் ட்வீட் செய்து வருகிறார் ஹர்பஜன். அவரது தமிழ் ட்வீட்டுகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது இந்தத் தமிழ் ட்வீட்டும் பலரால் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. தமிழக இளைஞர் ஒருவர் மூலம் ஹர்பஜன் சிங் இந்த டுவிட்டர் பதிவுகளை இட்டு வருகிறார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த ஹர்பஜன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங், ``வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம் எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்" என தமிழில் பதிவிட்டார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

More News >>