பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் - சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. இன்று முதலில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மைக் குற்றவாளிகள் ஆளும் கட்சி அரசியல் புள்ளிகளின் வாரிசுகள் என்றும் அதனை தமிழக காவல் துறை மூடிமறைக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எமுந்துள்ளது.தமிழகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்து போராட்டங்களும் வெடித்துள்ளது.
இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.