வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேச்சு
வரும் பொதுத்தேர்தலில், வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் என்று, குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக் கூட்டம் குஜராத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், புதிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சித்தராமையா, உம்மன் சாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி வதேரா தனது முதலாவது அரசியல் உரையை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:
வரும் மக்களவை தேர்தல் மூலம், பொதுமக்களாகிய நீங்கள் உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்க வேணும். என் இதயத்தில் இருந்து, நான் பேச விரும்புகிறேன். ஒரு விழிப்புணர்வு குடிமகனாக இருப்பதை விட பெரிய தேசபக்தி இருக்க முடியாது.
எனவே, தேவையில்லாத பிரச்சனைகளில் உங்களின் கவனத்தை திசை திரும்பாமல், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அது ஒரு ஆயுதம். அதேபோல், உங்கள் வாக்கும் ஒரு ஆயுதம். இது யாருக்கும் தீங்கை ஏற்படுத்தாது.
ஆளும் கட்சியினர் வாக்களித்தபடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார்கள். செய்தார்களா? பெண்களின் பாதுகாப்பு என்ன ஆனது?
வாக்கு கேட்டு அவர்கள் வந்தால், சரியான கேள்விகளை கேளுங்கள். நீங்கள் தான் வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்கு, தேசப் பாதுகாப்பு என்ற விஷயத்தை பா.ஜ.க. எழுப்பப்படுவதாக, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.