காங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் படேல் மக்களவை தேர்தலில் களமிறங்க வாய்ப்பு
படேல் சமூகத்தின் சக்திமிக்க இளம் தலைவராக உருவெடுத்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில், படேல் சமூகத்தவரின் ஆதிக்கம் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், இட ஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் போராட்டங்களை நடத்தினர். இதை முன்னின்று நடத்தியதன் மூலம், 25 வயதான ஹர்திக் படேல் பிரபலமானார். 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக அவர் போட்டியிட்டார்.
இந்நிலையில், குஜராத்திற்கு இன்று வந்த ராகுல் காந்தி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படேல் இணைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி மிகவும் நேர்மையானவர். சர்வாதிகாரியை போல் அவர் செயல்படமாட்டார். காங்கிரஸ் கட்சியை சுபாஷ் சந்திரபோஸ், நேரு, படேல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி வழி நடத்திச் சென்றனர். அவர்கள் மக்கள் நலனுக்காக உழைத்த தலைவர்கள். அவ்வகையில் காங்கிரஸில் நான் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.