காங்கிரஸ் கட்சியுடன் இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது - மாயாவதி திட்ட வட்டம்
காங்கிரஸ் கட்சியுடன் இனி எந்த மாநிலத்திலும் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், எதிரெதிராக இருந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ்கட்சி 38, சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் தவிர்த்து, பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின், மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், இனி காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி கிடையவே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். பா.ஜ.க.வை தோற்கடிக்க, சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியே போதும் என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில், அமைச்சரவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி இடம் அளிக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.