திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏன்? சிக்கலுக்கு உண்மையான காரணம் இதுதான
ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. இதனால், திமுக அணியில் தொகுதிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
மக்களவை தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக, 20 தொகுதிகளில் களமிறங்குகிறது.
மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரு தொகுதி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து, கடந்த மூன்று தினங்களாக திமுகவுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் கேட்கும் சில தொகுதிகளில் திமுகவும் போட்டியிட விரும்புவதே இழுபறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, திருச்சி உள்ளிட்ட இரு தொகுதிகளை இரு கட்சிகளுமே வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி, இன்று தொகுதி விவரங்களை ராகுல் முன்னிலையில் அறிவிக்க திமுக விரும்பியது. ஆனால், ராகுலின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரமாக இருந்ததால், திட்டமிட்டபடி நேற்றிரவு பேச்சு வார்த்தை நடக்கவில்லை.
இன்றும் பேச்சு நடைபெற வாய்ப்பில்லாத நிலையில், நாளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் பேச்சு நடத்தி, மற்ற ஒன்பது தொகுதிகளை இறுதி செய்வார்கள் என்று தெரிகிறது.