மோடி இனி ஒருபோதும் அரியணை ஏறமாட்டார் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கணிப்பு

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது; ஆனால் மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிராவில் போட்டியிடுகிறார். அந்த மாநிலத்தில் உள்ள சிறு கட்சிகளை தங்களது கூட்டணிக்கு கொண்டுவர, சரத்பவார் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்பார்த்த பலனை தரவில்லை.

இது தொடர்பாக, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு, பி.டபுள்யூ.பி. கட்சி ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல், ஸ்வாபிமானி சேத்காரி சங்கதானா கட்சியுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். முன்னேற்றம் இல்லாவிட்டாலும் கூட, விரைவில் இவ்விரு கட்சிகளும் எங்களுடன் இணையும் என்று நம்புகிறோம் என்றார்.

வரும் பொதுத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற சரத்பவார், எனினும் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் அமர வாய்ப்பு இல்லை என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

என்னுடைய மகள் சுப்ரியா சுலே, பேரன் பரத்பவார் ஆகியோர் இம்முறை போட்டியிடுவதால், நான் தேர்தலில் களமிறங்கவில்லை. இதற்கு தோற்றுவிடுவேன் என்ற பயம் காரணமல்ல என்று சரத்பவார் மேலும் தெரிவித்தார்.

More News >>