சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவராது! பொள்ளாச்சி சம்பவத்தில் கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்குப் பெருத்த பின்னடைவைக் கொடுத்திருக்கிறது பாலியல் வக்கிர சம்பவம். இந்த சம்பவத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர் ஆளும்கட்சி புள்ளிகள்.
பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தத்தை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. ஆனாலும் கொதிப்பு அடங்காததைக் கண்டு, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மனோகரன் பேசும்போது, ` பொள்ளாச்சி சம்பவத்தின் விளைவாக, தமிழகம் முழுவதும் கோபம், இயலாமை, வெறுப்பு, துயரம், பதற்றம், படபடப்பு என ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு உணர்ச்சியும் மாறி மாறி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு படிக்க வரும் பெண்களை 2012 ஆம் ஆண்டிலிருந்து காம வெறிபிடித்த சுமார் 20 விலங்குகள் முகநூல் வழியாக, புலனத்தின் (what's app) வழியாக என திட்டம் போட்டு ஒவ்வொரு பெண்ணையும் அவர்கள் வலையில் விழ வைத்து, அதை வைத்து மிரட்டி சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பணம் இருக்கும் பெண்களிடம் கோடிக் கணக்கில் பணம் பறித்துள்ளனர். ஏழைப் பெண்களை மிரட்டி அரசியல் பிரமுகர்களின் இச்சைக்கு அடி பணிய வைத்துள்ளனர்.
சின்னப்பாளையம் என்ற ஊரில் உள்ள பண்ணை வீட்டில் வைத்துத்தான் இக்கொடூரங்களைச் செய்துள்ளனர்.
சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ்குமார், பைனான்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட கொடூரர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். புகார் கொடுத்தவரான பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அம்மா பேரவைச் செயலாளர் என்று திரியும் காட்டுமிராண்டி நாகராஜ் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர்.
இந்தப் புகாருக்காக நாகராஜ், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ளார்கள் . பின்னர் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டு நால்வரும் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பல பேருக்குத் தொடர்புண்டு என்று திருநாவுக்கரசு பேசிய ஆடியோவும் வீடியோவும் கைதுக்கு முன்பே வெளிவந்தது. அம்மா ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொள்ளாச்சி ஜெயராமனோ, முக்கியக் குற்றவாளிக்கும் திமுக நிர்வாகிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறுகிறார்.
கோவை மாவட்ட காவதுறை எஸ்.பி பாண்டியராஜனோ, தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான்கு பேர் தவிர்த்து யாரும் குற்றவாளி இல்லை என்று கூறியுள்ளார் . இவர்கள் ஒட்டு மொத்தமாக மூடி மறைக்கிறார்களோ என்ற சந்தேகம் பலவாறு எழுகிறது.
அரசியல்வாதிகள் அதுவும் ஆளும் கட்சிக்காரர்களின் சட்ட மன்ற உறுப்பினர் வரையில் பெயர் அடிபடுவதால் சிபிசிஐடியோ சிபிஐயோ சுதந்திரமாக விசாரிக்க வாய்ப்பில்லை. எனவே கொடூரச் செயலில் அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரிபரந்தாமன் தலைமையில் சிறப்பு புலன்விசாரணை அமைப்பை அமைக்க வேண்டும்' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அருள் திலீபன்