பீகார் பரிதாபம்: 15 சீட் கேட்கும் காங்கிரஸ் கைவிரிக்கும் ஆர்ஜேடி
லோக்சபா தேர்தலில் பீகாரில் 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை ராஷ்டிரிய ஜனதா தளம் நிராகரித்துவிட்டது.
பீகாரைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாக 12 தொகுதிகளை ஒதுக்கினால் போதும் என்பது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் கணக்கு. ஆனால் காங்கிரஸ் கட்சியோ குறைந்தது 15 தொகுதிகள் தேவை என்கிறது.
ஆனால் பாஜகவை எதிர்க்கும் 6 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டி இருப்பதால் 11-12 தொகுதிகள்தான் காங்கிரஸ் கட்சிக்கு என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் காங்கிரஸ் சட்டசபை தலைவர் சதானந்த் சிங், பாஜகவை எதிர்க்கும் முக்கிய கட்சி காங்கிரஸ்.
ஆகையால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இல்லை எனில் தனித்தே போட்டியிடவும் காங்கிரஸ் தயார் என கூறியுள்ளார். இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் பதிலடி தந்துள்ளது.
அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில், நாங்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்து இருக்கவில்லை. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் இதுபோல் பேசுவது தவறு.
பாஜக, மாநில கட்சிகளுக்காக தம்முடைய இடங்களை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் வெற்றிகரமாக சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இத்தனைக்கும் 5 ஆண்டுகாலமாக பாஜகவை கடுமையாக விமர்சித்ததது சிவசேனா என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் ஒரே இடம்தான் என்பதை சிபிஐ(எம்.எல்.) நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.