குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும்-எண்ணை நிறுவனங்கள் எச்சரிக்கை
சென்னை: மத்திய அரசு ஆதார் இணைப்புக்கு கெடு விதித்துள்ள தேதிக்குள் ஆதார் இணைக்காவிட்டால் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என எண்ணை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமையல் கியாஸ் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில், முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க வங்கிகள் மூலம் நேரடியாக அவரவர் வங்கி கணக்குகளில் மானியம் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் எண், கியாஸ் இணைப்புக்கும் கட்டாயம் என உத்தரவிட்டிருந்தது.
இதற்காக நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்தது. பெரும்பாலானவர்கள் ஆதார் அட்டை பெற்ற நிலையில் ஒரு சிலர் மட்டும் இன்னும் ஆதார் அட்டை பெறவில்லை. ஆதார் அட்டை இணைத்தவர்கள் மானியம் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, ஆதார் அட்டை எண் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் வங்கி, கியாஸ் உள்ளிட்ட கணக்குடன் இணைக்க கெடுவை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மேற்கொண்டு குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் அட்டை இணைக்கவில்லை என்றால் சமையல் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என எண்ணை நிறுவனங்கள் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சமையல் கியாஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் தங்களது விவரங்களை சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் சிலிண்டர்கள் வழங்கப்படமாட்டாது. விவரங்கள் இணைக்கப்பட்டதும், சிலிண்டர்கள் வழங்க இருந்த தடை நீக்கப்படும்” என்றார்.