சோடா பாட்டில் எடுத்தாலும் நாங்கள் சந்திப்போம் - ஜீயருக்கு வைகோ பதிலடி

சோடா பாட்டில், கல் எடுத்தாலும் நாங்கள் அண்ணா வழியில் சந்திப்போம் என்று சடகோபன் ராமனுஜருக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து அவர்கள், ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை என்றும், கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள் என்றும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்களும், ஆதரவு குரல்களும் எழுந்தன. இதனையடுத்து வைரமுத்து அதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு வருத்தமும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஜீயர் சடகோப ராமானுஜர் ஆண்டாள் கோவிலில் உண்ணாவிரதம் இருந்தார்.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இருப்பினும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

மேலும், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்று கூறினார்.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேசிய வைகோ, “திராவிட இயக்கங்கள் மதயானைகளை அடக்கியே பழக்கப்பட்டவர்கள். சோடா பாட்டில், கல் எடுத்தாலும் நாங்கள் அண்ணா வழியில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>