இன்னும் எத்தனை எதிரிகளைத்தான் சம்பாதிப்பது? துரைமுருகனால் குமுறும் உடன்பிறப்புகள்
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசனும் இளங்கோவனும் சந்தித்துச் சென்ற சம்பவம், அரசியலாக்கப்பட்டதில் திமுகவிலேயே இருவிதமான புகைச்சல் கிளம்பியுள்ளது.
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என கடைசி நிமிடம் வரையில் எதிர்பார்த்துக் காத்திருந்தார் துரைமுருகன். அதற்கேற்ப, ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடைசிநேரத்தில் பண உதவி செய்ய முடியாது என ஸ்டாலின் உறுதியாகக் கூறிவிடவே, அதிமுக பக்கம் சாய்ந்தது பாமக.
அதனால்தான், இது மக்களுக்கான கூட்டணி அல்ல, பணத்துக்கான கூட்டணி என விமர்சனம் செய்தார் ஸ்டாலின். இந்தக் காட்சிகள் முடிந்த பிறகு தேமுதிகவோடும் திமுக தரப்பில் உள்ளவர்கள் பேசி வந்தனர்.
3 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க முடியாது என திமுக தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர்.
இதையடுத்து, அதிமுகவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அங்கும் பாமகவுக்கு இணையாக சீட் தர முடியாது எனக் கூறி, 4 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.
இதனை விரும்பாத பிரேமலதாவும், தேமுதிக பொறுப்பாளர்களை துரைமுருகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த சந்திப்பை விஷயத்தை மீடியாக்களிடம் கூறிவிட்டார் துரைமுருகன்.
இதைப் பற்றிப் பேசும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள், இன்னும் எத்தனை எதிரிகளைத்தான் நாம் சம்பாதித்துக் கொள்வது. வேலூரில் தன்னுடைய மகன் எம்பி ஆக வேண்டும் என்பதற்காகத்தான் துரைமுருகன் இவ்வாறு செய்தார். தேமுதிகவை அவமானப்படுத்தினால் ராமதாஸ் மகிழ்ச்சியடைவார், அதன்மூலம் வேலூர் தொகுதியில் பாமகவால் எந்த இடையூறும் வராது எனக் கணக்கு போட்டு இவ்வாறு செய்திருக்கிறார்.
இதனால் திமுகவுக்கும் சேர்ந்தே கெட்ட பெயர் வந்துவிட்டது. பாமகவுக்கு மாநிலம் முழுக்க எதிர்ப்பு வாக்குகள் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் கட்சிக்கு அப்படிப்பட்ட எதிர்ப்பு வாக்குகள் எதுவும் இல்லை. அப்படியிருக்கும்போது இந்தளவுக்கு நாம் அவர்களை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம் என வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
- அருள் திலீபன்