பொள்ளாச்சியைப் போல தினமும் 1000 சம்பவங்கள்! பட்டியிலிடும் பாமக முன்னாள் எம்பி
பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வக்கிர சம்பவம், அதிமுக அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளிவராது என சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை எழுப்பி வருகின்றன.
இந்தநிலையில், பாலியல் வக்கிர கும்பல்களிடம் இருந்து எந்தெந்த வகைகளில் பெண்கள், தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரிவாகப் பதிவிட்டிருக்கிறார் பாமக நிர்வாகி டாக்டர் செந்தில்.
தருமபுரி தொகுதியின் முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
பொள்ளாச்சி நிகழ்வுகள் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. சமூக விரோதிகள் சிலர் கூட்டாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மிக இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய செய்தியும், அது குறித்து வெளியாகியுள்ள காட்சிகளும், நம் நெஞ்சங்களைப் பதற வைத்திருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மிகக் கொடூரமான இந்த நிகழ்வுக்கு தேசிய ஊடகங்கள் தர வேண்டிய முக்கியத்துவத்தை தரவில்லை எனச் சாடி இருக்கிறது. கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக, இந்திய மாணவர் சங்கம் இதனைக் கண்டித்ததோடு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது.
திமுகவின் கனிமொழி உடனடியாகச் சென்று பொள்ளாச்சியிலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்.
பொள்ளாச்சி நிகழ்வு, ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல, கடலில் மூழ்கி இருக்கும் பனிப்பாறையின் ஒரு பகுதி (Tip of the iceberg). இதுபோன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
இந்த வாரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு. 15 வயது உடைய ஒரு பள்ளிச் சிறுமி. அந்தச் சிறுமிக்கு 25 வயதுடைய ஒரு வாலிபனோடு காதல். அவள் வீட்டை விட்டு தன் காதலனோடு ஓடிவிட முடிவு செய்கிறாள்.
இது அறிந்த அவள் தந்தை அவளை தடுத்து, அவளை கடுமையாகக் கண்டிக்கிறார். அவர் தன் மனைவியையும் அடித்து, உதைத்து மகளின் இந்த நடத்தைக்கு தாய்தான் காரணம் எனவும் அவளை வெட்டிப் போடப் போகிறேன் என்றும் மிரட்டி விட்டு வெளியே போய் விடுகிறார். குழப்பத்தில் இருந்த தாய் அந்தப் பெண்ணுக்கு 'குருணை மருந்து' என்று சொல்லப்படும் கடுமையான விஷம் கலந்த உணவை தன் மகளுக்கு பரிமாறுகிறார்.
அந்தச் சிறுமிக்கு உணவைப் பார்த்தவுடனேயே அதன் மாறுபாடு தெரிந்து, அந்த உணவோடு நேராக காவல் நிலையத்திற்கு சென்று தன்னை கொன்று விட தன் பெற்றோர் முயற்சிப்பதாக புகார் அளிக்கிறார். புகாரின்பேரில் அந்தத் தாயும் தந்தையும் கைது செய்யப் படுகிறார்கள்.
கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைக்கும் அந்த எளிய குடும்பத்தில் இரண்டாவது மகள் வயதுக்கு வந்து மூன்று நாள்கள் மட்டுமே ஆகியிருக்கிறது. மூன்றாவதாக ஒரு சிறுவனும் இருக்கிறான். பெற்றோர் இல்லாத இந்த மூன்று குழந்தைகளும் இன்று பாதுகாப்பின்றி, உணவுக்கு வழியின்றி இருக்கிறார்கள். சில இரக்க குணம் கொண்ட வழக்கறிஞர்கள், அந்தக் குடும்பத்தின் வறிய நிலையைக் கண்டு, சிறுமியை சந்தித்து 'நீ வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டால் உங்கள் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்' என்று வேண்டிக் கேட்டபோது அந்தப் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.
தன் காதலனே தனக்கு முக்கியம் எனவும் தான் வீட்டை விட்டுச் சென்று அவனோடு சேர்ந்து வாழப் போவதாகவும் அந்தச் சிறுமி பிடிவாதமாகக் கூறிவிட்டாள்.
இந்த விஷயத்தில் தவறு யாருடையது? 13 வயதுப் பெண்ணிடம் காதல் புரிந்த அந்த கயவனுடையதா? காதல் என்பதை கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய கடமையாக பரப்புரை செய்யும் சில சமூக விரோதிகளுடையதா?
பள்ளிப் பெண்களையும், கல்லூரிப் பெண்களையும் தொடர்ந்து, காதல் பாடம் சொல்லித் தர சுற்றும் திசை மாறிய இளைஞர்களுடையதா? வறுமையிலும், அறியாமையிலும் வாழ்ந்து கூலித்தொழில் செய்து பிழைக்கும் அந்த வேளான் குடும்பத்துடையதா?
இது மட்டுமல்ல. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அரசு மகளிர் பள்ளியில் ஒரே பெண், திருமணம் செய்து கொள்வதற்காக தன் காதலனோடு ஐந்து முறை ஓடிய கதைகளும் உண்டு.
சமூக ஊடகம் தொடர்புகளை எளிதாக்கியிருக்கிறது. உள்ளங்கைக்குள் அடங்கும் கைபேசிகள் 25 வயதுக்கு மேல் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் தெரிய வேண்டிய விஷயங்களை பத்து, பன்னிரண்டு வயது சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கற்றுக் கொடுக்கின்றன. 15 வயதுக்குள் பெரும்பாலான பள்ளிச் சிறுவர்களும் சிறுமிகளும் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் படங்களையோ, தகவல்களையோ கைபேசி மூலம் அறிந்து கொள்கிறார்கள்.
பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் இன்றைய பெண்களுக்கான எதிரி சமூக ஊடகங்கள் மட்டுமல்ல. காதலை புனிதமானதாகவும், சமூக மாற்றத்திற்கான ஒரே கருவியாகவும், ஒரே திட்டமாகவும் முன் நிறுத்தும் அரசியல் இயக்கங்களும் தான்.
தன் தாயால் நஞ்சு கலந்த உணவு அளிக்கப்பட்ட அந்தச் சிறுமி இறந்து போயிருந்தால், கனிமொழி தொடங்கி தமிழகத்தில் இருக்கிற முற்போக்கு புரட்சி இயக்கங்கள் எல்லாம் தர்மபுரி மாவட்டத்திற்கு வரிசையாக வண்டி கட்டிக் கொண்டு வந்து, காதலை காப்பாற்ற முனைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இத்தகைய சமூக அவலங்கள் நடக்காமலிருக்க பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும் திட்டங்கள் என்ன? பெண்கள் தங்களை சமூகத்தில் நிலைநாட்டிக் கொள்ள சுயசார்பு அவசியம். தங்கள் கல்வியை நிறைவு செய்து, ஒரு நல்ல வருவாய் தரும் பணியையோ அல்லது தொழிலையோ அமைத்துக் கொண்ட பிறகே காதலைப் பற்றியோ, திருமணம் பற்றியோ நினைக்க வேண்டும். காதல் என்பது திருமணத்தை நோக்கிய பயணம். திருமணம் என்பது குடும்பம் என்கிற மிகப் பெரிய நிறுவனத்தை அமைத்து, பாதுகாக்கிற மாபெரும் பணி.
இந்தப் பொறுப்பினை மேற்கொள்ள கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும். வருவாய்க்கான வழியை உறுதி செய்திருக்க வேண்டும். மனம் முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றும் நிகழ இருபத்தோரு வயது நிறைவாகி இருக்க வேண்டும். அதற்காகத்தான் பெண்களின் வயதை 21 வயதாக நிர்ணயிக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்துகிறார். இது தந்தை பெரியாரின் கருத்தும்கூட அதுவே. தந்தை பெரியார் பெண்களை 25 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மனம் முதிர்ச்சி அடையாத வயதில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்களை பின்தொடர்ந்து ஏமாற்றும் இத்தகைய அயோக்கியர்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றுவதற்காகத்தான் மாநகரங்களில் மகளிர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவது போல மாநிலம் முழுவதிலும், குறிப்பாக கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லும் அந்த குறிப்பிட்ட நேரங்களில் 'மகளிர் மட்டும்' பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. சீருடை அணியாமல், சாதாரண உடையில், பெண் காவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்லும் பேருந்துகளில் பயணித்து, பதின்ம வயதுப் பெண்களை அணுகிப் பேச முற்படும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் கல்வியையும், மன முதிர்ச்சி பெறுவதற்காகவும், காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் சமூக விரோதிகளை கண்டறிவதற்கான ஆலோசனைகளையும் கற்பிக்க வேண்டும். ஒன்றுமறியா பருவ வயதுப் பெண்களை சமூக விரோதிகள் தினம் தினம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டுக்கற்பழிப்புகளும்,
இளம்பெண்கள் கொலையும் ஏறக்குறைய தினசரி செய்தியாக மாறியிருக்கிறது. இந்த நிலையின் தீவிரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், பேசாமல், ஆண்டுக்கு ஒருமுறை எங்கோ நடக்கும் ஒரு கொலையை 'சாதி ஆணவக் கொலை' என்று பெயரிட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, அதற்கென்று தனிச் சட்டம் வேண்டும் என்று கூட்டம் போட்டு முழங்கியவர்கள் கொஞ்சம் மாறி இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் இன்றைய பிரச்சினை சாதி ஆணவக் கொலைகள் அல்ல. சமூக விரோதிகளால் இளம் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையே முதன்மைப் பிரச்சனை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த உண்மையை மறுத்தும், மறைத்தும் பேசியவர்கள், சமூக விரோதிகளால் ஏற்படும் கொடுமைகளில் இருந்து இளம் பெண்களை காப்பதற்காக மருத்துவர் ராமதாஸ், தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளை கொச்சைப்படுத்தி வந்தவர்கள், தேர்தலுக்காக புதிய நிலைப்பாட்டை காட்டுகிறார்கள். காதலை புனிதப்படுத்துவதும், முற்போக்கானதாகக் காட்டுவதும், சாதி ஒழிப்பிற்கான உக்தியாகவும், சமூக நீதிக்கான வேலைத்திட்டமாகக் காட்டுவதும் முட்டாள்தனம். பைத்தியக்காரத்தனம். அப்படிச் செய்வது காட்டுமிராண்டித்தனத்திற்கும், பாலியல் குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் வழிகோலும்.
இவ்வாறு செந்தில் பதிவிட்டுள்ளார்.